Friday, October 29, 2010

வாஸ்து வுக்கு வைத்தியம் செய்யலாமா?

`வாஸ்து’; `நட்சத்திரம்’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.


ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்ய வெண்டுமென்று மருத்துவர் கூறிய மறு நிமிடமே நல்ல நேரம் குறித்த துண்டு சீட்டுடன் தாத்தாவோ அப்பாவோ வந்து விடுவார்கள்.

குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் கீழ்வரும் காரணங்களுக்காக குறைமாதக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூட தயக்கம் காட்டுவதில்லை.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை ஆட்டி வைத்துவிடுமாம்; சித்திரை அப்பன் தெருவிலாம்; இன்னும் என்னென்னவோ பழமொழிகளும் புது மொழிகளும், இயற்கையான பிரசவ நேரத்தையே மாற்றிக்கொண்டு வருகின்றன- ஆனி, பங்குனி மாத இறுதி நாட்களின் சிசேரியன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!

இதற்கெல்லாம் மருத்துவர்கள் ஏன் துணை போகவேண்டுமென்ற விவாதம் எழலாம்.

ஆரம்பகாலங்களில் elective caesarean செய்ய நாள் குறிக்கும்போது பெற்றோர்களின் விருப்பத்தை மதிக்கும் விதமாக அதற்கு துணை போன மருத்துவ உலகம் இன்று அதிலிருந்து மீளமுடியாமல் தர்மசங்கடத்தில் தவிப்பதுதான் உண்மை.

குறிப்பிட்ட நல்ல நாளின் நல்ல நேரத்தில் எல்லாக் குழந்தைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம்;அதனால் எற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என விழி பிதுங்கி நிற்கிறது.

அதையும் தாண்டிய கொடுமை சமீப காலங்களில்! சுகப் பிரசவத்திற்குரிய வாய்ப்புகளையே தராமல் நல்ல நேரத்தில் பிரசவமாக வேண்டுமென்று, விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொள்ளுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.

இந்த மாதிரி செய்துகொள்பவர்களில் மருத்துவர்களும் அடக்கம் என்பதுதான் கவலை தரக் கூடியது.`படிப்பது ராமாயணம்னாலும் இடிப்பது ராமர் கோயில்தான்’ கதையாகிவிட்டது. அறிவியல் படித்தவர்களே அஷ்டமி நவமியைப் பிடித்துத் தொங்கும்போது
சாமான்யர்களைக் குறை சொல்லமுடியுமா?

37 வாரங்கள் முடிந்த குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தும்கூட, 35 வாரங்களில் சிசேரியன் செய்துகொண்ட சக மருத்துவரை எனக்குத் தெரியும்.

இத்தனை manipulations உடன் கணிக்கப்படுகிற நேரங்கள் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக இருக்கமுடியும்?? பிறக்கப் போகும் ஜீவனின் ஆரோக்கியத்தை விட அதிக சக்தி வாய்ந்ததாகிவிட்டது அர்த்தமற்ற சாஸ்திரம்.

வாஸ்து பற்றியோ கேட்கவே வேண்டாம் . அது குறித்து எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். என் நண்பரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டபோது முதலில் அணுகியது ஜோதிடரைத்தான்.

புதுவீடு கட்டியதில் வாஸ்து சரிவர கடைப் பிடிக்கப்படாததால்தான் அத்தனை கஷ்டங்களும் என்று அவர் சொல்லிவிடவே, அதற்குப் பரிகாரமாக வீட்டை இடித்து உடைத்து மாறுதல் செய்தார்கள்.

அப்படி செய்த மூன்றே மாதத்தில் , நன்கு தேக ஆரோக்கியத்துடனிருந்த அவர் மனைவி அகால மரணமடைந்தார். அதற்கு அந்த ஜோதிடர் என்ன விளக்கம் கொடுத்தார் என் நான் கேட்கவில்லை.

வாஸ்து இன்னும் கப்பலேறி/விமானமேறி அமெரிக்கா போன்ற தூர தேசங்களுக்குச் சென்றிருக்காது என்று நம்புகிறேன்.

THANKS TO:http://forusdear.blogspot.com/2005/09/blog-post_112645728602030371.html

1 comment:

 1. \\\அதையும் தாண்டிய கொடுமை சமீப காலங்களில்! சுகப் பிரசவத்திற்குரிய வாய்ப்புகளையே தராமல் நல்ல நேரத்தில் பிரசவமாக வேண்டுமென்று, விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொள்ளுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது///

  சட்டப்படி இது மிகவும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

  பெண்களுக்கான பாதுகாப்புச்சட்டங்களில் இதற்கான தடுப்புச்சட்டம் கொண்டுவராதது எவ்வளவு பெரிய கொடுமை?

  இப்படிப்பட்ட மூடர்களால்தான், வீனர்களால்தான் ஜோதிடத்திற்கே தீராத அவமானம் ஏற்படுகிறது.

  உங்கள் ஞானசூனியன்..

  ReplyDelete