Wednesday, October 27, 2010

வாஸ்து சாபமா? வரமா?

வாஸ்து தேவைதானா? வாஸ்து வை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள்
--------------
வாஸ்து - vasudevan.dr

அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!


வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை.

இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!

ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகாஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள்.

கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே?

மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.

துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!

பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்?

'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள்.

இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே?

அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள்.

நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவைதானா?

பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.

எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!

இந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.

ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார்.

வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார்.

ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.

மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது.

"வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார்.

"அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.

"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.

தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.

தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.

இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.

மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!

விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!

"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.

"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி! THANKS TO: DR.VASUDEVAN.
SOURCE:http://tamilnanbargal.com/node/634
---------------------
வாஸ்து, ஜோதிடத்துக்கு தடை கோரி வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு!

வாஸ்து, ஜோதிடத்துக்கு தடை விதிக்கக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொது நல வழக்கு
‘ஜன்கித் மஞ்ச்’ என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் பகவான்ஜி ரயானி. இவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.

பிரசித்தி பெற்ற ஜோதிடர் பேஜன் தாருவாலா, வாஸ்து ஆலோசகர்கள் டாக்டர் ரவிராஜ், ராஜேஷ் ஷா, சந்திரசேகர் குருஜி, நவரத்தின ஜோதிடர் பவிக் சங்கவி, பிரம்மார்ஷி ஸ்ரீகுமார் சுவாமிஜி ஆகியோரை எதிர் வழக்குதாரர்களாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் அவர் விஞ்ஞானம் அல்லாத ஜோதிடத்தையும், வாஸ்துவையும் தடை செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எப்.ஐ.ரெபெல்லோ, ஜே.எச்.பாட்டியா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரரான பகவான்ஜி ரயானி வாதிடுகையில், அரசியல் சாசனத்தின் கொள்கைப்படி, விஞ்ஞானப்பூர்வமானதை மட்டுமே அரசு ஊக்குவிக்க வேண்டும். ஜோதிடம் சொல்வதை தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு விஞ்ஞானம் அல்ல என்று கூறினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். SOURCE: NEWS

1 comment:

  1. சுயநல மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள்

    ReplyDelete