Monday, October 18, 2010

ஜோதிடர்களும் கோவில் குருக்களும் கூட்டணி கொள்ளை.

கூட்டணி அமைத்துக் கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு நமது நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவைகள் மிகப் பெரிய விளம்பரதாரர்களாக இருக்கின்றார்கள்.

பஞ்சாங்கத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் பார்ப்பனர்கள் ஏன் இப்படி பதறுகின்றார்கள், பதை பதைக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது,

இந்த நாட்டில் நாத்திகர்கள் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை, பஞ்சாங்கம் பார்க்காததனால் பாழாகிப் போய் விடவில்லை.


இன்னும் கேட்டால் நமது பெரியார் பட நாயகர் இனமுரசு சத்யராஜு அவர்கள் சொன்னதுபோல் நாத்திகர்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள், வரவுக்கு ஏற்றபடி செலவு செய்கின்றார்கள் , வாழ்வியல் சிந்தனையோடு மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்கின்றார்கள் .
 

ஒழுக்கத்தை, நாணயத்தை மூலதனமாகக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் பஞ்சாங்கம் பார்ப்பவர்கள், ஜாதகம் பார்ப்பவர்கள் இப்படியா?

எனக்குத் தெரிந்த அலுவலக நண்பர் ஒருவர். அவரது +2 படிக்கும் மகள் ஒரு சிறு மோட்டார் வாகன விபத்தில் லேசான காயம் அடைந்தார். அதைப் பற்றி விசாரிப்பதற்காக வந்த ஒருவர், நண்பரிடம் விபத்துக்கு காரணம் ஏதேனும் தோஷமாக இருக்கலாம், உடனே ஜாதகத்தை ஜோதிடம் காட்டுங்கள், அந்தப் பெண் ஜாதகம், உங்கள் ஜாதகம், உங்க வீட்டுக்காரம்மா ஜாதகம் எல்லாத்தையும் ஜோதிடம் காட்டுங்கள் என்றார்.

தோஷத்திற்கு பரிகாரம் ஏதேனும் சொன்னால் உடனே அதனைச் செய்துவிடுங்கள் என்று பரிந்துரைத்தார். நண்பர் லேசாக சிரித்துக் கொண்டே , கவனக் குறைவால் வண்டியிலிருந்து கீழே விழுவதற்கும், ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்றார்.

அய்யயயோ, அப்படி நினைக்காதீர்கள், ஜாதகம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது, முன்னாடி பார்த்து பரிகாரம் செய்துவிட்டால் சரியாகிவிடும் என்றார். ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னவர் பார்ப்பனர்.

ஓவ்வொரு இடத்திலும், அரசு அலுவலகமாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் பார்ப்பனர்கள் ஜோதிடத்தை, ஜாதகத்தை பரிந்துரைக்கும் விற்பனைப் பிரதிநிதிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

சிலர் ஜோதிடம் பார்க்கும் (பார்ட் டைம்) பகுதி நேர ஜோதிட அரசு , தனியார் ஊழியர்களாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு, மரியாதை. பொய்மையை, புளுகுமூட்டையை, அறியாமையை மக்களிடத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றோம் என்னும் குற்ற உணர்வு அவர்களிடம் இல்லை.

என்னோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி, என் கையில் ஜோதிடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்தார். சார், நீங்கள்தான் கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சிக்காரர் ஆச்சே, ஜோதிட வாடையே உங்களுக்கு ஆகாதே, உங்கள் கையில் எப்படி இந்தப் புத்தகங்கள் எல்லாம் என்றார்.

ஜோதிடம் பொய் என்பதை விளக்கி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் , அதற்காக சில புத்தகங்களை வாங்கியிருக்கின்றேன் என்றேன் .அப்படியா? என்றவர் , சார் என் வீட்டிற்கு வாருங்களேன், வந்து என் கணவரிடம் ஜோதிடம் பொய் என்பதைப் பற்றி அவரிடம் கொஞ்சம் பேசுங்களேன் என்று சொல்லும்போதே கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர்.

பதறிப்போன நான், ஏன் அழுகின்றீர்கள் கேட்டபோது, சார், என் மகளுக்கு 26 வயது ஆகின்றது, இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறாள், இதுவரை 20 வரன் வந்து விட்டுப் போய் விட்டது. என் கணவர், என் பெண் ஜாதகம் ஏதோ பாவம் ஜாதகம் என்கின்றார். பெண் பார்க்க வருவதற்கு முன்பே ஜாதகத்தை பார்த்துவிட்டு, இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றார். ஜாதகப் பைத்தியமாய் இருக்கும் அவரிடம் வந்து கொஞ்சம் ஜோதிடம் பொய் என்பதைப் பேசுங்களேன் என்று கையெடுத்துக் கும்பிட்டு அழைத்தார்.

இப்படி ஜோதிடப் பைத்தியங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் எத்தனை மனைவிகளோ, எதிர்த்துப் பேச முடியாமல் காலம் கழிக்கும் எத்தனை மகள்களோ - தெரியவில்லை.

இந்த 80 பக்க ஜாதக நோட்டு எத்தனை பேர் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது? .

ஏன் ஆத்திக வாதிகளாக இருந்தாலும் கூட, ஜாதகம், ஜோதிடம் பொய் என்று தெரிந்தாலும் கூட அதனைப் பற்றி பேச மறுக்கின்றார்கள் என்ற கேள்வி வந்த போது , தந்தை பெரியார் பதில் அளிக்கின்றார் பாருங்கள்.

"சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும், முட்டாள் தனத்திற்கும் சரியான கர்த்தாக்கள் ஆவார்கள்.

எப்படியெனில், முதலில் ஜோசியன் ஒருவனுடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுவதன் மூலம் அவனுக்கு வரும் ஆபத்துக் கண்டம் நீங்க "சாந்தியும்", கிரக தோஷ பரிகாரத்திற்கு குருக்களைக் கொண்டு சாமிகளுக்கு அர்ச்சனை அபிசேகங்களும் செய்யும்படி சொல்லுவான் .

இதைக் கேட்ட அந்த மனிதன் தனது முட்டாள்தனத்தினால் ஏற்பட்ட பயத்திற்காகவும் , ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்வான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சாந்தி கழிக்க கடைச் சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவ கிரகங்களூக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சனி, செவ்வாய் முதலிய ஏதாவது கிரகத்துக்கோ, ஒரு சாமிக்கோ அர்ச்சனை, எள்ளு, பருத்திக் கொட்டை முதலியவற்றால் விளக்கு வைத்தல், அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும், ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் செய்யும்படிச் சொல்லிவிடுவான்.

இவைகளை எல்லாம் செய்தால் மந்திரவாதிக்கு வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக்கும் சேர்வது உண்டு. " தந்தை பெரியார்- சோதிட ஆராய்ச்சி பக்கம்-7-8.

இன்றைக்கு பங்குச் சந்தை வர்த்தகம் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் 2000 ஆண்டுகளாக உள்ள பங்கீட்டு வர்த்தகம் பற்றி பெரியார் சொல்கின்றார்.

இந்த கோயில் உண்டியல் வர்த்தகத்தில் பணம் போடுகின்றவனுக்கு ஒரு பலனும் இல்லை .மக்களிடமிருக்கும் பேராசையையும், முட்டாள்தனத்தையும் பயன்படுத்தி அவர்களின் உழைப்பால் வருகின்ற பணத்தை நயவஞ்சகமாய் உறிஞ்சுகின்றவர்கள் இந்த ஜோசியன்,மந்திரவாதி, கோயில் குருக்கள் மூவரும் என்பதைப் பெரியார் சொல்கின்றார்.

கூட்டணி அமைத்துக் கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு நமது நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவைகள் மிகப் பெரிய விளம்பரதாரர்களாக இருக்கின்றார்கள். - வா. நேரு

SOURCE : viduthalai.com.

1 comment:

  1. arumayaana katturai, swami malai endru oru oor irukkiradhu andha ooril ulla anegam pergalukku jodhidam paarpadhudaan velai, adhvum olai suvadigalai vaithu yaamaatrugiraargal

    ReplyDelete