Tuesday, October 26, 2010

குறிபார்த்தல் கைரேகை பித்தலாட்டங்கள்.

குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.மூடநம்பிக்கைகளில் சிலவற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண்டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன. இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம். சில மூடநம்பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது.இந்தக் காரணமொன்றே பல பொய் நம்பிக்கைகளின் மேல் வைத்துள்ள விஸ்வாசத்திற்கு ஆதாரமென அறிதல் வேண்டும். நமது ஆசையின்படியே விஷயங்கள் நமக்கு அனுகூலமாகவே வேண்டுமென்ற மனப்பான்மை பெரும்பாலாருக்குண்டு.
இந்த மனப்பான்மையாலேயே ஜோசியத்தின் மேலும், ஜாதகத்திலேயும், குறி சொல்லும் விஷயங்களிலேயும், கைப்பார்ப்பதிலேயும், மை போட்டுப் பார்ப்பதிலேயும் நம்மவர்களில் பலருக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது.

கஷ்டப் படாமலே நமக்குச் செல்வம் வராதா? நாம் முயற்சி செய்யாமலே நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்பிவர மாட்டார்களா? உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வமும்,கீர்த்தியும் வராதா? என்ற நோக்கங்கள் நமது மனத்தில் அடுத் தடுத்து எழுவதால் ஆரூடம் என்ன தெரிவிக்கின்றது.

குறி சொல்லுகிறவன் நமக்கு என்ன ஆதாரமளிக்கின்றான்? கைரேகை என்ன குறிக்கின்றது? என்று அவாக் கொண்டு இந்த மோச வார்த்தைகளின்மேல் நம்பிக்கை வைக்கின்றோம்.
குறி சொல்லும் விஷயங்களில் நமது பாமர ஜனங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. நமக்குப் பல குறைகள் நேரிடுகின்றன. இந்தக் குறைகளை நீக்கிக் கொள்ள ஆசை மேன்மேலும் உண்டாவது சகஜம்.

இந்த ஆசையால் குறி சொல்லுகிறவன் சொல்லை நம்ப நேரிடுகின்றது. அவன் சொல்லுவது மெய்யோ,பொய்யோ, நம்முடைய கோரிக்கையின்படி நிறைவேறும் என்று அவன் சொல்லுகின்றபடியால், அவன் சொல்லின் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது.

குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.
குறி மேடையில் குறி சொல்லுகின்றவர்களில் பலர் நரம்பு வியாதியால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் எளிதில் கோபம், சந்தோஷம் அடைவார்கள். இவர்களுடைய ஆடம்பரங்கள் பாமர ஜனங்களின் மனத்தை உருகச் செய்து விடுகின்றன.

உடுக்கை, சிலம்பு முதலிய வாத்தியங்கள் குறிகேட்க வந்திருப்போரை ஓர்வித மயக்க முண்டாக்கக் கூடியதாக இருக்கின்றன. குறி சொல்லும் இடங்களில் மதுரை வீரன் படமும், அதில் குதிரைச் சவாரி நாய்களுடன் செல்வதாக வரையப்பட்டுத் தொங்கவிட்டிருக்கும்.

குறி சொல்பவனும், பகல் வேஷத்திற்குரிய திருநீறு, குங்குமம் திரேக முழுமையும் பூசி கொண்டு, கழுத்தில் பொன், உத்திராக்கம், கைகளில் பொன் தோடா, பட்டாடை முதலிய வஸ்திரங்களை அணித்து, உடுக்கைச் சிலம்புடன் அவன் இஷ்ட தேவதையை வசியமாக்க முயற்சி செய்வான்.

இந்த வேஷங்களைக் கண்டோர் மயங்கி விடுகின்றார்கள். இவர்கள் மயக்கத்தை அதிகரிக்க, உடுக்கையையும், சிலம்பையையும் உரத்துத் தட்ட ஆரம்பிப்பான். அவனுக்கு ஆவேசமும் வருவதாக நடிப்பான். இந்த ஆவேசத்திற்கு வேண்டிய மதுபானமும் அருந்துவதோடு, புட்டியிலும் சாராயம் மதுரை வீரனுக்காகப் படையல் போட்டிருக்கும்.

வேலை ஒன்றுமில்லாத வீணர்கள் அந்தக் குறிமேடைகளில் சென்று பக்திவான்களைப் போல நடிப்பார்கள். இந்தச் சூதை அறியாத பெண்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பார்கள். இவைகளை ஏதோ அலட்சியமாகக் கேட்டு, அதற்கு ஏதோ ஓர் பரிகாரத்தைத் தெரிவிப்பான்.

இந்த பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து கையிலிருக்கும் பணத்தையோ, நகையையோ, தட்சணையாகக் கொடுப்பார்கள். இந்த விதமாக அந்தப் பெண்கள் மதிமோசம் போவார்கள்.
முக்கியமாக, ஸ்தீரிகள் பிள்ளை வரம்பெறக் குறி மேடைகளுக்குப் போவதைப் பார்க்கலாம் அல்லது தனக்கும் தனது புருஷனுக்குமுள்ள மனஸ்தாபத்தைக் குறித்துக் குறி கேட்கப் போவதுமுண்டு.

இந்த இரண்டு விஷயங்களைக் குறி சொல்லுகிறவன் எப்படித் தீர்ப்பானோ என்று விசாரிப்பதே கிடையாது. இதைப் போன்ற மூடநம்பிக்கையைக் காண்பதரிது.

பிள்ளை பிறப்பதற்கு ஆண் பெண் இருவர் திரேகம் தக்க பருவத்தில் இருத்தல் வேண்டும் ஆயிரக்கணக்கான ஸ்தீரி புருஷர்களுடைய திரேகம் பக்குவப்பட்டு இருப்பதால், அவர்களுக்குச் சந்ததி விருத்திக்குத் தடையொன்றுமில்லை.

ஆனால், ஏகதேசமாக ஏதோ ஒருவர் இருவருக்குத் திரேக பக்குவமில்லாமல் இருக்கும்; அதனால் கர்ப்பம் தரிக்க முடியாமற் போகும். இதனையும் தீர்த்துக் கொள்ள அவுஷதங்களும், சிகிச்சைகளும் இருக்கின்றன.

மலட்டு ஸ்தீரி புருஷர் சிற்சில சிகிச்சையால், சந்தான விருத்தி பெறுகிறார்கள். அப்படியும் சிலருக்குக் குணப்படுவதில்லை. மலட்டு ஸ்தீரி புருஷர்களைப் போல் மலட்டும் ஆடும், மாடும், புழுப் பூச்சிகளும், செடிகளும், மரங்களும் உலகில் ஏகதேசமாக இருக்கின்றன.

விளையாத நிலங்களும் சில இருக்கின்றன. இவைகளை ஏதாவது செடி, மரம், புழு, பூச்சி, ஆடு, மாடுகளை உற்பத்தி செய்ய மதுரை வீரனால் முடியாதிருக்க, ஸ்தீரி புருஷர்களை மாத்திரம் பிரஜா விருத்தி செய்வதென்றால் யார் நம்புவது?

இதை உன்மத்தர்கள்தான் நம்பக்கூடும்! பிரஜாவிருத்திக்குத் தடையை நீக்க டாக்டர்களுக்கே தெரியுமே அல்லாது மோசக்காரர்களாகிய குறி சொல்கின்றவர்களுக்கு ஒன்றும் தெரியா.

மதுரை வீரன் படத்தாலும் உடுக்கை சிலம்பாலும், தீபத்தின் சுடர் அசைவாலும் மலட்டுத்தனம் நீங்குமாயின் இவ்வளவு சுளுவாகக் கோடானு கோடி கறம்பு நிலங்களை விளைய வைக்கலாமே!
பதர் நெற்களை கதிர் விடச் செய்யலாமே! சில சமயங்களில் குறி கேட்கப் போனவர்களுடைய கோரிக்கைகளைக் குறி சொல்லுகின்றவன் அவர்கள் அவனிடம் சொல்லாமலே அவன் தெரிந்துகொண்டவன் போல் தெரிவிக்கிறான்.

இந்தக் குறி வித்தையில் சில மோசங்கள் நடக்கின்றன. சில இடங்களில் ரகசிய ஆள்களைக் கொண்டு விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு குறி சொல்லு கிறார்கள்.

சாதாரணமாகக் குடுகுடுப்பைக்காரர்கள் இந்த மோசத்தைச் செய்கிறார்கள். சிலர் தங்களுடைய குறைகளை உதடு அசைவதாலும், கை விரல்கள் ஆடுவதாலும், மெதுவாகத் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வதாலும், தங்கள் முகப்பார்வையாலும் தெரியும்படி செய்கின்றார்கள்.

கூர்மையான பார்வையுடையோனாகிய குறி சொல்வோன், இந்தக் கைகளைக் கொண்டே அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்கின்றான்.

குறி சொல்லுகின்றவன் கேட்கும் கேள்விகளுக்குக் கொடுக்கும் விடைகளாலேயும், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டு விடுகின்றார்கள்.

இத்தியாதி தந்திரங்களால் குறி சொல்லுகின்றவன் தன்னைப் பிறர் நம்பும்படி செய்கின்றான். இந்தச் சூழ்ச்சிகளை அறியாத பாமர மக்கள் குறிகாரன் சொல்வதெல்லாம் மதுரைவீரன் அருளாலென்றும், தெய்வீகத் தன்மையாலென்றும், மதி மயங்கி மூடநம்பிக்கையை வளர்த்து வருகின்றார்கள்.

இந்தக் குறி மேடைகளில் எத்தனைபேர் தங்கள் பொருளை இழந்தவர்கள், மதியை இழந்தவர்கள், மானத்தை இழந்தவர்கள். இவைகளுக்குக் கணக்கில்லை! ஆனால் நமக்கும், நமது நாட்டுக்கும் நன்மை பயக்க நமது சுயமரியாதை யோர் அதிர்ஷ்ட வசமாகத் தோன்றி இத்தியாதி மோசங்கள் வெளிப்படுத்திவரும் நமது நாட்டின் பாக்கியமே பாக்கியம்.

அதாவது கை பார்த்துக் குறி சொல்லும் வித்தையொன்றுள்ளது.
கை ரேகைகளைப் பார்த்துக் குறவர்கள் சாதாரணமாகக் கிராமங்களில் குறி சொல்வதுண்டு, குடுகுடுப்பைக்காரனும் இவ் விதக் குறிகளைச் சொல்கின்றான்.

பண்டார வேஷம் போட்டுக் கொண்டு, ஓலைச் சுவடியொன்றை கையிலேந்தி, கையைப் பார்த்துக் குறி சொல்லும் வேஷக்காரர்களைச் சென்னைத் தெருக்களிலும், நாட்டுப்புறங்களிலும் பார்க்கலாம். நமது சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அருகில் அநேகர் ஆரூடம் அதாவது ஒருவிதக் குறி சொல்லிப் பிழைக்கின்றார்கள்.

கையைப் பார்கின்றான், ஓலைச் சுவடியோ, அல்லது காகிதச் சுவடியையோ திருப்புகின்றான். உடனே உனது காரியம் கை கூடுமென்கின்றான். உனது மகன் திரும்பி வருவான் என்கின்றான். உனது புருஷனுக்கு வேலை கிடைக்குமென்கின்றான்.

இத்தியாதி அற்ப விஷயங்களைத்தான் தெரிந்து சொல்வதுபோல நடித்து இந்தக் குறி சொன்னதற்கு கால் அணா அதாவது மூன்று பைசா பெறுகிறான்.

இந்த ஏழை சொல்லும் குறிக்கும், இந்து முதலிய பேப்பர்களில் விளம்பரப்படுத்தும் பிரசண்ட சோதிடருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லையென அறிக; ஒரே வித்தியாசமுண்டு. அதாவது, ஒருவன் காலணாவுக்குக் குறியோ, சோதிடமோ, ஆரூடமோ சொல்கின்றான். மற்றொருவன் ஒரு ரூபாய் முதல் 5, 10, 15 வரை பெறுகின்றான் இரண்டு நபரும் சொல்லும் சோதிடங்களில் ஒன்று மெய்யில்லை.

எல்லாம் மன மயக்கே பொய்யை நம்புவதற்கு வெறும் நம்பிக்கை தான் வேண்டும்.

லண்டன் பட்டணத்தில் சில பெரிய தெருக்களில் கொட்டை கொட்டையான எழுத்துகளால் இங்கு கைபார்த்துக் குறி சொல்லப்படும். இங்கு எல்லாக் குறைகளும் நிவர்த்திக்கப்படும் மென்று விளம்பரமிடும் விளம்பரப் பலகைகளைப் பார்க்கலாம். அங்கும், இங்கும் எங்கும் பாமர ஜனங்கள் தங்கள் சஞ்சலங்களை சிரமமான வழிகளில் போக்கிக் கொள்ளாமல் மூட சோதிடனிடம் குறிகேட்டு மயங்குகின்றார்கள்.

அறிவை இழந்தவர்கள்தான் இத்தியாதி பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுப்பார்களே யொழிய அறிவுடையோர் இந்த மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடார்கள்.

உலகில் கோடானு கோடி மக்கள் காலை முதல் இரவு வரை உழைத்து தங்கள் ஜீவனத்தைச் செய்து உயிர் பிழைத்து வருகின்றார்கள். ஆனால், சிலர் வேலையொன்றும் செய்யாமல் சோம்பல் கொண்டு அறிவையும் வளரச் செய்யாமல், பகுத்தறிவையும் கொன்று சிற்சில மோச வார்த்தைகளைக் கேட்டு ஒருவித ஆறுதலை அடைகின்றார்கள். சோதிடம், ஆரூடம், குறி முதலிய வித்தைகள் ஒரு வகுப்பார் பிழைக்க ஏற்படுத்திக் கொண்ட உபாயங்களென அறிக.

விஞ்ஞான முறையால் இனிவரும் சம்பவங்களை அறிவது போல் இந்தக் குறிகளாலும், சோதிடத்தாலும் கைகுறிகளாலும், ஒன்றும் தெரிந்து கொள்ள வகை இல்லை. எங்கும் தெரிந்து கொண்டவருமில்லை.

சோம்பேறிகள் மனத் திருப்திக்காக உண்டாக்கிக் கொண்டது இந்த வித்தைகளேயொழிய பொதுமக்களுக்குப் பொதுப் பிரயோசனத்துக்கு ஏற்பட்ட வித்தைகள் அல்லவென அறிதல் வேண்டும்.

கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்வது உலகம் முழுமையும் பரவியுள்ள ஓர் வித்தையாகும்.

அது வெறும் பழக்கமே அல்லாது உண்மையல்ல. நமது கையிலுள்ள கோடுகளைப் போல் வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் வாலுடைய குரங்குகளுக்கும், கையில் கோடுகள் இருக்கின்றன.

ஆனால், காட்சி சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து சோதிடம் சொல்வார் யாருமில்லை!

நமது கைகளில் இருக்கும் கோடுகள் குரங்குள் மரத்தில் தாவிப் பிடித்துத் தாண்டும் காலையிலுண்டான தோல் மடிப்புகள், பரம்பரையாக தோன்றுகின்றன.

நமது கைகோடுகள் வம்ச பரம்பரையாக வந்தவை. பல கோடி வருஷங்களாக நமது மூதாதைகள் மரங்களில் வாழுங்காலை தாவுவதற்குத் தங்கள் கைகளை உபயோகித்து வந்து இருக்க வேண்டும்.

இன்றைக்கு வாலுடைய குரங்குகளும், வாலில்லாக் காட்டு மனிதக் குரங்குகளும் அம்மாதிரியாகவே தாவிச் செல்கின்றன. அப்படித் தாவிச் செல்வதால் கைகளும் மடிக்க வேண்டி வருகின்றன. கைகள் மடியுண்ட இடங்களில் வரி வரியாகக் கோடுகள் உண்டாயின.

அப்படி உண்டான கோடுகள்தான் நமக்கும் வந்திருக்கின்றன. இதுதான் நமது உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகளின் உற்பவம். மரத்தைத் தாண்டி மடிந்த இடங்களைக் கொண்டு நமது நடத்தைகளை எப்படி அறியக் கூடும் எனக் கேட்கின்றோம்?

இரண்டு வரி அய்ந்தாம் விரலுக்குக் கீழ் இருந்தால் அவனுக்கு இரண்டு பெண்சாதியாம்! ஆனால் ஒரு வரியுடய பலருக்கு பல பெண்சாதிகள் இருப்பதை காணலாம்.

ஆதலின் இந்த வரிகளைக் கொண்டு நமது நடவடிக்கைகளைக் குறிப்பது ஆங்கிலத்தில் pureguess என்று சொல்லலாம். அதாவது வெறும் உத்தேசம்!

இந்த வெறும் உத்தேசத்தை உண்மையென நினைத்துக் கொண்டு மோசம் போகின்றவர்கள் அநேகர் உளர்.

இந்த ஆதாரத்திற்கு இன்னொரு நியாமும் உண்டு. விரல்கள் மடியும் இடங்களில் கோடுகளைப் பார்க்கலாம். இந்தக் கோடுகள் விரல்கள் மடியுண்டபடியால் விரல் மடிப்புகளிலெல்லாம் விரல் வரிகள் தோன்றியுள்ளன. இந்தப் பிரத்தியட்ச காட்சி போலவே மற்ற கைவரிகளும் தோன்றியுள்ளன. ஆனால் விரல் மடிப்புகள் பிரயோஜனமில்லை யெனில் மற்ற கை மடிப்புகள் மாத்திரம் பிரக்யாதி பெற்றது எவ்விதம்?

எவனோ ஒருவன் ஒரு காலத்தில் கைக் கோடுகளைப் பார்த்து குறிசொல்லி இருப்பான். அது முதலில் வெறும் உத்தேசமாகவே சொல்லி இருப்பான்.

இதை உண்மையென நம்பி, பழக்க வாசனையால் கையைப் பார்த்துக் குறி சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் நமது கையைப் பார்த்து குறி சொல்லும் பழக்கம் உண்டாகி இருத்தல் வேண்டும்.

எந்த மூடனும் இந்த பழக்கத்தைக் கையாளலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கையில் விஸ்வாசமுள்ளவர்களைப் பற்றித் தான் நாம் வருந்துகின்றோம்.

விளக்கு வைத்துப் பார்த்தல் என்னும் ஒரு மூடப் பழக்கம் பாமர மக்கள் வீடுகளில் வழங்கி வருகின்றது. ஒரு பூசாரி தன்முன் விளக்கை ஏற்றி, அந்த எரியும் சுடரை அந்த அம்மன், இந்த அம்மன் என்று வர்ணித்து, இதைச் சொல்லம்மாவென எரியும் சுடருடன் பேசுவதைப்போல் நடித்து, சுடர் அசையாமலிருந்தால் அம்மா உத்தரவு அளிக்கவில்லை என்றும், அசைந்தால் அம்மா உத்தரவு கொடுத்தாள் எனவும் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் விதம் ஒன்றுண்டு.

இதுவும் ஒரு ஜீவன உபாயமென அறிக. கிராமாந்திரங்களில் ஏழைகள் நோய் வாய்ப்பட்டால் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கொண்டு நிவர்த்திக்கப் பார்க்கின்றார்கள். இதனுடைய ஆபாசத்தை சற்று விளக்கிப் பார்க்கவேண்டும்.

கோடானுகோடி கோடி தீபங்கள் தெரிகின்றன. அசையாத தீபங்களையும் தற்காலத்தில் பார்க்கின்றோம். அதாவது, மின்சார தீபங்கள். இந்தத் தீபச் சுடர்கள் காற்றிலும் அசைவதில்லை. காற்றில்லாமல் போமாகில் அசைவற்று எரியும். காற்று வீசியதும் தீபச் சுடர்கள் அதைப் பார்க்கலாம். இந்தச் சுடர்கள் அசேதனங்கள்; அதாவது உயிரற்றவை.

நமது சொல்லையும் கேட்க முடியாதவை. காலில் மிதிபடும் கல்லுக்கும் விளக்கில் எரியும் தீபச் சுடர்களுக்கும், மேற்கண்ட விஷயங்களில் வித்தியாசமில்லை.

அப்படியிருக்க, எவ்விதம் சுடர்களுடன் பேசக் கூடுமோ அது நமக்கு விளங்கவில்லை. பைத்தியம் பிடித்தவர்கள் தான் சுடருடனும், சுவருடனும், செடி , மரங்களுடனும் பேசுவார்கள்.
இந்த விஷயத்தை யோசியாமல் விளக்கு வைத்துப் பார்த்து அத்துடன் பேசுவதென்றால் என்ன மூடத்தனமென்று எண்ணவேண்டும்?

பூசாரிதான் அவன் ஜீவனத்திற்கு மோசம் செய்கின்றான். பகுத்தறிவுடைய ஏழை மக்கள் அவன் பித்தலாட்டத்திற்கு ஏமாந்து, அவன் பிதற்றுவதைக் கேட்டு, அவனை நம்புவதென்றால், என்ன மதி மோசம்!

விளக்கில் அம்மனோ, சாத்தானோ, சனியனோ, புகுந்து கொண்டு பூசாரி கேட்பதற் கெல்லாம் விடை கொடுப்பதாகச் சொன்னாலும், முன் நம்பிக்கையைவிட இது நம்பத்தகாதது; அதனினும் ஆபாசமே ஆகும்.

தீபச் சுடர்களைக் காற்றில்லாத அறைகளில் எரிய வைத்து, திருஷ்டாந்தமாக இதனை யாரும் பரீட்சித்து பார்க்கலாம். காற்றில்லாத கூடத்து அறையில் விளக்கை ஏற்றி அதன் அருகே உட்கார்ந்து கொண்டு, காற்றை மெதுவாக வாயின் மூலமாக இழுத்தால் சுடர் அசைவற்று நிற்கும்.

அது நமது, இஷ்டப்படி அசையவேண்டுமானால், கையை ஆட்டினாலும், நமது தேகத்தை ஆட்டினாலும், அல்லது மெதுவாக ஊதினாலும் தீபச்சுடர் அசையும் இவ்வித இவ்விதச் சலனமற்ற நிலையையும், அசையும் நிலைமையையும் யாரும் செய்து காட்டலாம்.

ஆனால், இவ்விதமாகச் சுடர்களை அசையச் செய்வதையும், அசையாமல் இருக்கச் செய்வதையும், யாரும் தகுந்த இடங்களில் செய்து காட்டலாம்.

இவ்விதமாக யாவரும் செய்துகாட்ட முடியும்போது, எந்த அம்மனும், மாரியாத்தாளும், மதுரை வீரனும் தீபச் சுடரில் புகுந்து கொண்டதாக எண்ணுவதில்லையே.

ஆனால், பூசாரி அதே மாதிரி அசைய வைத்தால், அந்த அசைவு தெய்வங்களால் உண்டானதாக எண்ணுவது பைத்தியக்காரத் தனமல்லாது வேறென்ன?

காற்றில்லாமலிருந்தால் சுடர் அசைவற்று எரிகிறது. காற்றுப்பட்டால் அசைகிறது. ஆதலின் அசைவுக்கும் அசையா தன்மைக்கும் காற்றே காரணம். இதற்கு எந்த அம்மன் தயவும் வேண்டுவதில்லையே!

இந்தப் பித்தலாட்டங்களைச் செய்யும் பூசாரிகளையும், அவர்கள் சொல்வதைக் கேட்கும் பாமர மக்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது காற்றடிக்கும் அறைகளில் அதாவது ஜன்னல்களுக்கு எதிரிலாகிலும், வாசல்களிலும், தெருக்களிலாகிலும், தீபத்தைக் குத்து விளக்கில் ஏற்றி அதன் சுடரை அசைவற்று நிற்கும்படிச் செய்யுங்கள் பார்ப்போம்?

என்னதான் நீங்கள் உரத்து அம்மனை வர்ணித்தாலும், அந்த அம்மன் சுடரில் நுழையவே மாட்டாள்! இந்தத் தந்திரத்தை அறிந்த பூசாரி, கூடத்து மூலையிலும் காற்றில்லா அறையிலுமே சுடரை எரியப் பார்ப்பான்; இதுதான் பூசாரிகள் செய்து வரும் தந்திரம். - ம.சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை. SOURCE: viduthalai.com 12.6.08

1 comment:

  1. IN INDIA FOR EVERY STUPID HINDU OF INDIANS (WHATEVER HIS LITERAL QUALIFICATION), EACH EVERY STUPID A "PERIYAR" NEED TO LIGHT HIS MIND FROM DARKNESS. HE DONT WANT DELIVERANCE BUT WANT TO BE SLAVE ENGRAVING THE NAME AS "HINDU" ON HIS FOREHEAD WHICH IS THE PLACE MEMORIES. THAT IS WHY ONE "PERIYAR", "VEERAMANI" AND SO MANY OTHERS CANT CHANGE THESE FOOLS. THEY LIKE TO HEAR THESE BUT NOT TO IMPLEMENT IN THEIR OWN LIFE.

    ReplyDelete