Wednesday, October 13, 2010

நாடி ஜோதிட புரட்டு.

நாங்கள் ஜோதிடத்தை நம்புவோம் என்றால் என்ன பொருள்? நாங்கள் எங்களை நம்பவில்லை, நாங்கள் அறிவியலை நம்பவில்லை, நாங்கள் அறிவை நம்பவில்லை என்று தானே பொருள்.

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும் என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!


வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்கு அடிப்படை. ஜோதிடம் அறிவியல் பூர்வமானது எனச் சிலர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை.

திருவள்ளுவர் சொல்வார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள், என்று! அதுபோலத்தான் இந்த ஜோதிடமும்!

நாடி ஜோதிடம் பற்றிய சுவடிகள் இல்லை.

நாடி ஜோதிடம் தொடர்பாக சென்ற 15.04.2007 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சு.சோமசுந்தரம் விளக்கம் கேட்டபோது, இங்குள்ள ஓலைச் சுவடிகளுக்கு 2ஆம் சரபோஜி மன்னர் காலத்திலிருந்து அட்டவணை உள்ளது. அதன்படியும், வேறு ஆவணங்களின் படியும் இந்நூலகத்திலிருந்து எந்தத் தனி நபர்களுக்கும் இதுவரை சுவடிகள் ஏதும் கொடுக்கப்படவில்லை எனத் தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த நூலகத்தில் 49,000 தலைப்புகளில் ஓலைச் சுவடிகள் உள்ளன. இதில் தமிழ், வடமொழி, மராத்தி, தெலுங்கு ஆகியவை அடக்கம். தமிழ் மொழியில் மருத்துவப் பிரிவில் நோய் கண்டறியும். நாடிச் சுவடிகள் உள்ளன.

நாடி ஜோதிடம் பற்றிய சுவடிகள் இல்லை.
20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாவட்ட ஆட்சியர், வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடர்களிடமிருந்து ஓலைச் சுவடிகளைப் பறிமுதல் செய்து அதை வழக்கு நடத்தித் திரும்பப் பெற்றதாகக் கூறுவதிலும் உண்மையில்லை.

வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடர்கள் சரஸ்வதி மகாலுக்குப் பணம் செலுத்திவிட்டு படித்து ஜோதிடம் பார்ப்பதாகச் சொல்வதும் பொய் என அதில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோதிடத்தில் பல வகை உண்டு. இயற்கை ஜோதிடம், கணிப்பு ஜோதிடம், ஜாதக ஜோதிடம், பஞ்சாங்க ஜோதிடம், மருத்துவ ஜோதிடம், ஆன்மீக ஜோதிடம், பொதுநிலை ஜோதிடம், பிரசன்ன அல்லது ஆருட ஜோதிடம், ஜோதிட இயற்பியல், ஜோதிட வானிலை இயல், ஜோதிட உயிரியல், ஜோதிட உளவியல், ஆழ்ந்த அல்லது இரகசிய ஜோதிடம், கேபலச் ஜோதிடம், எண் கணிதம், கைரேகை ஜோதிடம், மனையடி ஜோதிடம், நாடி ஜோதிடம் எனப் பல வகை உண்டு.

இத்தனை வகையிலும் தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள மனிதர்கள் ஆலாய் பறக்கிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கைரேகை பார்ப்பவர் கைரேகையைப் பார்த்துக் கணிக்கிறார். பஞ்சாங்க ஜோதிடம் பார்ப்பவர் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்கிறார். எண் கணிதம் பார்ப்பவர் அதில்தான் தெளிவாகக் கூற முடியுமெனக் கூறுகிறார்.

ஆக ஒரு மோசடிக்காரர் இன்னொரு மோசடியை நம்புவதில்லை.

மேற்குறிப்பிட்ட 18 வகையான ஜோதிடங்களில் ஜாதக ஜோதிடம், ஆருட ஜோதிடம், எண் கணிதம், கைரேகை ஜோதிடம், மனையடி ஜோதிடம், நாடி ஜோதிடம் ஆகியவையே நடைமுறையில் அதிகம் உள்ளன. இதில் மற்ற ஜோதிடங்களெல்லாம் அம்பலமாகிவிடுகின்றன.

ஆனால் நாடி ஜோதிடம் என்பது ஏதோ தமிழ்நாட்டின் மர்மங்களுள் ஒன்று என்னும் நிலையில் ஊடகங்களால் காட்டப்டுகிறது. சின்னத்திரை தொடர்கள் கூட நாடி ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு காசு பார்த்திருக்கின்றன.

சின்ன சேலத்திலிருந்து நமது வாசகி ஒருவர், நாடி ஜோதிடம் பற்றிய உண்மையை உண்மைதான் வெளிக் கொண்டுவர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாடி ஜோதிடத்தால் பாதிக்கப்பட்ட சிலரும் நம்மிடையே தங்களின் ஆதங்கத்தைக் கொட்ட, அதையே அடிப்படையாக வைத்து அந்த மோசடியைத் தோலுரிக்க நாமும் களம் இறங்கினோம்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள் உங்களுக்காக.....
இதில் நாடி ஜோதிடம் என்பது சீர்காழிக்கு அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் பிரபலமாகப் பேசப்படுகிறது. தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நாடி ஜோதிடம் பார்க்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகிறார்கள். நாடி ஜோதிடத்தின் சிறப்பு என்ன? என்று ஜோதிடர்களைக் கேட்டால், இது மற்ற ஜோதிடம் போல் இல்லை.

இது ஓலைச்சுவடியின் மூலம் பார்க்கப்படும் ஜோதிடமாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற பலன்களை அந்தந்த ஓலைச் சுவடிகளின் மூலம் கூறுகிறோம். இந்த ஓலைச் சுவடிகளை தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகாலில் இருந்து ஏலத்தில் பெறுகிறோம்.

இந்த ஓலைச் சுவடிகள் 1000 ஆண்டுகள் பழைமையானவை என நீண்ட விளக்கம் கொடுத்தனர். சரஸ்வதி மகாலில் இருந்து ஓலைச் சுவடிகளை எப்படி ஏலத்தில் விடுகின்றனர் என நமக்கு அய்யம் எழவே, அப்பகுதியில் பிரபலமான வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சு.சோமசுந்தரம் அவர்களைச் சந்தித்துக் கேட்டோம். அவர் தெளிவான, ஆதாரப் பூர்வமான பதிலை நமக்கு அளித்தார்.

இதோ அவர் பேசுகிறார் கேளுங்கள். தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் சற்றொப்ப 49,000 ஓலைச் சுவடிகள் உள்ளன. இதில் மருத்துவம், இசை, நாட்டியம் எனப் பல்வேறு துறைகள் தொடர்பான செய்திகள் உள்ளன. தெலுங்கு, வடமொழி, மராத்தி போன்ற மொழிகளிலும் ஓலைச் சுவடிகள் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகள் 2 அடி நீளத்திலும், 2 அங்குல நீளத்திலும் கூட உள்ளன.

கொடுமைக்கு அளவில்லையா?
கோபாலகிருஷ்ணன் என்கிற விவசாயி நாடி ஜோதிடம் பார்க்க வைத்தீஸ்வரன் கோவில் சென்றுள்ளார். அவரைப் பார்த்து நீங்கள் லாரி உரிமையாளராக இருக்கின்றீர்கள், உங்கள் அம்மா இறந்துவிட்ர் (அவரின் அம்மா நன்றாகவே உள்ளார்) எனக் கதையளந்து இருக்கிறார்கள்.

அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் கருத்தட்டாங்குடியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றுள்ளார். நீ முற்பிறவியில் அகஸ்தியர் மனைவி மீது ஆசைப்பட்டுள்ளாய். அதனால்தான் உனக்கு பிரச்சினை வருகிறது. உன் பிரச்சினைகள் தீர ஹோமம் வளர்க்க வேண்டும் என 6 மாதம் இழுத்தடித்து, இப்போது அவர் மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதை விடக் கொடுமை என்ன தெரியுமா? ஆந்திராவிலிருந்து ஒரு பெண் வந்துள்ளார். அவரைப் பார்த்த நாடி ஜோதிடர், நீ முற்பிறவியில் இராஜராஜனின் தங்கை குந்தவையாக இருந்தாய். நீ இராஜ பரம்பரையைச் சேர்ந்தவர், எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட அப்பெண், தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று நான் மன்னர் இராஜராஜனின் தங்கை. இது என் அண்ணன் கட்டிய கோவில், எனக் கூறி 1 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தாராம். அதுமட்டுமின்றி கோவிலுக்கு எதிரே விடுதியில் நிரந்தர அறை எடுத்துத் தங்கி பணத்தைத் தண்ணீராய் செலவழித்துள்ளார்.

இதிலுள்ள எழுத்துகள் எல்லாம் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை. இதற்கு வட்டெழுத்துகள் எனப் பெயர். இந்த எழுத்துகளை இப்பொழுது யாரும் படிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இந்த ஓலைச் சுவடியில் பலன்கள் உண்டு எனப் பித்தலாட்டம் செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஒரே கைரேகை உள்ளவர்கள் யாரும் இல்லை என விஞ்ஞானம் சொல்கிறது.

ஆனால் இவர்களோ 40, 50 ஓலைச் சுவடிகளை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பார்க்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு ஓலைச் சுவடியை ஒரு தடவைப் பார்த்தவுடன் அதைக் காவிரி அல்லது வேறு புனித நீரில் கலந்துவிட வேண்டுமாம். அதாவது ஒரு ஓலை ஒருவருக்குத்-தான் பயன்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பார்க்கிறார்களே அது எப்படி சாத்தியமாகிறது?

ஓலைச் சுவடியை வெறுமனே கையில் வைத்துக் கொண்டு, ஜாதகத்தைப் பொதுவாகச் சொல்கிறார்கள். இவர்கள் ஓலைச் சுவடியை யாரிடமும் கொடுப்பதுமில்லை, காட்டுவதுமில்லை.

வைத்தீஸ்வரன் கோவிலில் மட்டும் 50 இடங்களுக்கு மேல் நாடி ஜோதிட நிலையம் உள்ளது. இவர்களுக்கென்று முகவர்கள் உண்டு. எதிர்காலத்தைத் தெரிந்து சாதிக்க போகும்(?) மனிதர்களை இந்த முகவர்கள்தான் அழைத்துக் கொண்டு வருவார்கள்.

இவர்களுக்குத் தங்கும் வசதியும் (லாட்ஜ்) செய்து தரப்படும். தங்கும் விடுதியில் பெயர், முகவரி, விவரங்கள் சேகரிக்கப்படும். அவ்விவரங்கள் அடுத்த நாள் ஜோதிடருக்குச் சென்றுவிடும். இதில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் ஒரு பங்குண்டு.

சரஸ்வதி மகாலில் இருந்து ஓலைச் சுவடிகளை ஏலத்தில் பெறுவதாகக் கூறுகிறார்களே என நாம் மீண்டும் குறிப்பிட்டுக் கேட்ட போது, கிடையவே கிடையாது. அது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.

தங்களின் மோசடிகளுக்கு வலுவூட்டவும், வியாபாரத்தைப் பெருக்கவும் அப்படி ஒரு செய்தியைத் தொடர்ந்து அவர்கள் பரப்பி வருகிறார்கள். இவர்கள் வைத்திருக்கும் ஓலைச் சுவடிகளைக் கார்பன் டேட்டிங் டெஸ்ட் செய்தால் அச்சாயம் வெளுத்துவிடும். இவர்கள் அந்த ஓலைகளை நம் கண்ணிலேயே காட்டுவதில்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து ரோனி என்றொரு அம்மையார் வைத்தீஸ்வரன் கோவில் வந்துள்ளார். அவர் ஓலைச் சுவடியை வைத்து ஜோதிடம் பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த அம்மையார் எப்படியோ ஒரு ஓலைச் சுவடியைப் பெற்று, நேராக சரஸ்வதி மகால் சென்றுள்ளார். அங்கு இந்த ஓலையைக் காட்டி விவரத்தைக் கேட்ட போது, அவ்வளவும் மோசடி எனப் பதில் கூறி அனுப்பியுள்ளனர்.

அப்பெண்மணி ஆஸ்திரேலியா சென்று இந்த மோசடியை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி சரஸ்வதி மகால் பெயரைக் கூறிக் கொண்டு, ஓலைச் சுவடியில் ஜோதிடம் என மக்களிடம் இலட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என வழக்கறிஞரும், முற்போக்குச் சிந்தனையாளருமான சு.சோமசுந்தரம் நம்மிடையே வருத்தத்தோடு தெரிவித்தார்.

இந்த வழக்கறிஞர் சொன்ன செய்திகளை எடுத்துக் கொண்டு, சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச் சுவடிகளின் காப்பாளரைச் சந்தித்தோம். அவர் கூறும் போது, வழக்கறிஞர் சோமசுந்தரம் சொன்ன செய்திகள் அனைத்தும் உண்மைதான். சரஸ்வதி மகாலில் 200 ஆண்டுகள் பழைமையான ஓலைச் சுவடிகள்தான் உள்ளன.

ஆனால் 500 மற்றும் 1000 ஆண்டு பழைமையானது என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அது பொய். நம்முடைய தட்ப வெப்ப நிலைக்கு 200 ஆண்டுகள் மட்டுமே சுவடியைப் பாதுகாக்க முடியும். அதுமட்டுமின்றி அச்சுவடிகளில் உள்ள எழுத்துகளை நம்மால் படிக்க முடியாது.

அதைப் படித்து பலன் சொல்வதாகக் கூறுவது ஏமாற்று வேலை. அது மட்டுமின்றி ஓலைச் சுவடிகளில் ஜோதிடம் தொடர்பான எந்த விசயமும் இல்லை.

பனை ஓலையில் தேயிலைச் சாற்றை ஏற்றி, இவர்களாகவே சுவடி தயாரிக்கிறார்கள். இதில் கீறல் இருக்குமே தவிர எழுத்துகள் இருக்காது. இந்த ஜோதிடர்கள் சரஸ்வதி மகால் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என அவர் கூறினார்.

இதற்கிடையே உலகத் தமிழாராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் மஹாலட்சுமி என்பவரைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறும்போது, ஜோதிடவியல் எனும் ஆராய்ச்சி நூலை 1996 இல் நான் வெளியிட்டுள்ளேன். அதில் ஜோதிடத்தின் தோற்றம், வளர்ச்சி வகைகள், மேல் நாட்டிற்கும், இங்குமுள்ள வேறுபாடு அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.

அதேபோல ஓலைச்சுவடிகளில் நாடி ஜோதிடம் என்கிற மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளேன் எனக் கூறினார்.

இப்படி ஆதாரபூர்வமான செய்திகள் இருந்தாலும் நாங்கள் ஜோதிடத்தை நம்புவோம் என்றால் என்ன பொருள்? நாங்கள் எங்களை நம்பவில்லை, நாங்கள் அறிவியலை நம்பவில்லை, நாங்கள் அறிவை நம்பவில்லை என்று தானே பொருள்.

இப்படி இருந்தால் வாழ்க்கையில் எப்படி உருப்படுவது, மன்னிக்கவும் உயர்வது? சிந்திப்போம்! - வி.சி.வில்வம்
 SOURCE:   http://www.unmaionline.com/  .    AUG 2008.  
----------------------------------------------
கேள்வி: ஒரு ரூபாய் - இரண்டு ரூபாய் பொருள்கள் வாங்கினால் கூட அந்தப் பொருள் நல்லதாக இல்லாவிட்டால் ரூபாயை வாபஸ் தந்துவிடும்போது, திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு ஜோடிப் பொருத்தம், நேரப் பொருத்தம் பார்த்துச் சொல்லி பணம் பறிக்கும் ஜோதிடர்களிடமும் பணம் வாபஸ் வாங்க நாம் நினைப்பதில்லையே ஏன்...?- கருமலையான், இளையான்குடி

பதில்: மீண்டும் மீண்டும் அந்த மோசடி வியாபாரிகளிடம் செல்லும் மூடநம்பிக்கையாளர்களுக்குப் புத்தி வருவதில்லையே!

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பது சகஜம்தானே!
   http://www.unmaionline.com/  AUG 2008.  

2 comments:

 1. தலைப்பே தவறு.

  "நாடி ஜோதிட புரட்டு" என்பதைவிட

  "நாடி ஜோதிடர்களின் புரட்டு" என்பதே நீங்கள் எழுதிய கதைக்கு சரியான தலைப்பு.

  கதைக்கு ஏற்ற தலைப்பை தருவதற்கு முயற்சி தேவை.

  ReplyDelete
 2. கேள்வி: ஒரு ரூபாய் - இரண்டு ரூபாய் பொருள்கள் வாங்கினால் கூட அந்தப் பொருள் நல்லதாக இல்லாவிட்டால் ரூபாயை வாபஸ் தந்துவிடும்போது, திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு ஜோடிப் பொருத்தம், நேரப் பொருத்தம் பார்த்துச் சொல்லி பணம் பறிக்கும் ஜோதிடர்களிடமும் பணம் வாபஸ் வாங்க நாம் நினைப்பதில்லையே ஏன்...?- கருமலையான், இளையான்குடி

  பதில்: மீண்டும் மீண்டும் அந்த மோசடி வியாபாரிகளிடம் செல்லும் மூடநம்பிக்கையாளர்களுக்குப் புத்தி வருவதில்லையே!

  ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பது சகஜம்தானே!


  ஐயா அறிவாளிகளே (?)


  "இந்த வழக்கில் நாம்தான் ஜெயிப்போம் என்று சொல்லும் வக்கீல்களிடமிருந்தும், இவரை காப்பாற்றி விடலாம் என்று பணம் கொள்ளையடிக்கும் டாக்டர்களிடமிருந்தும் பணம் திரும்ப
  வாங்கியிருக்கிறீர்களா? "

  உருப்படியான வேலையைபாருங்கள்.


  அன்புடன் கருணாகரன், இடைப்பாடி.

  ReplyDelete