Saturday, October 9, 2010

படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்டுமா?

குரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்டுமா? கிளி ஜோஸ்யம் பாருங்கள்.

குரோர்பதி ஜோசியர்கள் என்ற தலைப்பில் 5.11.2008 குமுதம் வார இதழில் வெளியான கட்டுரையை இங்கே தந்துள்ளோம்:

தாம்பரத்துல சொந்த வீடு இருக்கு சார். ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. ஒரு வழியா கல்யாணமும் முடிஞ்சுது. கிண்டியில் ஏதோ லீ மெரிடியன் ஓட்டலாம். மூத்தவனுக்கு அங்கதான் வேலை. இன்ஜினீயரிங் காலேஜ்ல கடைசிப் பையனுக்கு இது ஃபைனல் இயர்.


புதுசா ஏதோ ஆப்பிள்னு மொபைல் போன் வந்திக்காமே. வாங்கித் தரணும்னு அடம் புடிக்கிறான் சிக்கன் பிரியாணியை உள்ளே தள்ளிய தெம்பில் பல்லைக் குத்திக் கொண்டே பக்கத்து சீட்டுக்காரரிடம் பேச்சுக் கொடுக்கிற அரசாங்க ஊழியரின் டயலாக் மாதிரி தோணுதா?

இவர் ஒரு ஜோசியர், கிளிக் கூண்டுதான் மூலதனம். எப்போதும் முருகன் துணை.

வேதவள்ளிக்கு நாற்பது வயசு. வெற்றிலை போட்டு சிவந்த வாய். குங்குமம் அப்பிய கறுப்பு நெற்றி. வங்கிக்குள் இவர் நுழைந்தாலே களை கட்டிவிடும். நல்லாயிருக்கியா மகராசி? ஒரு அம்பது ரூபா கொண்டாந்துருக்கேன். வரவு வச்சிரு தாயி!

சுருக்குப் பையிலிருந்து அழுக்கு நோட்டுகளாக அய்ம்பது ஆயிரத்தை மேஜை மேல் பரப்பி அதிர வைப்பார். இவரின் இஷ்ட தெய்வம் ஜக்கம்மா.

முடிந்தால் நம்புங்கள். இவர்களுடைய தினச் சம்பளம் சுமார் மூவாயிரம். மாத வருமானம் எண்பதாயிரம். அது சரி, அம்பானிக்கு சக்சஸ் ஸ்டோரி இருக்குற மாதிரி சில சமயங்களில் லட்சத்தையும் எட்டும்.

சாதாரண அருக்காணிக்கு இருக்கக்கூடாதா என்ன?

ஜோசியர்களின் ராயல் லைஃப் ஸ்டைலைப் பற்றி அவர்களிடம் கேட்டோம்.

கிளி ஜோசியம் பார்க்கணும்னா முப்பத்தஞ்சு ரூவா ரேட். கூடவே கைரேகையும் பார்க்கச் சொன்னா அய்ம்பத்தோரு ரூவா வாங்குவோம்.

அஞ்சு நிமிஷம் ஒரு கையைப் பார்க்கறதுண்டு. தோஷம் இருக்குனு தெரிஞ்சா, அதைக் கழிச்சுரலாமான்னு கேட்பேன். இதுக்கு அய்நூத்தி ஒண்ணுல ஆரம்பிச்சு, அய்யாயிரத்து ஒண்ணுவரை அவங்களோட வசதிக்குத் தகுந்த மாதிரி வாங்கறதுண்டு! தன்னுடைய செல்லக் கிளி எலிசபெத் ராணிக்கு சோளப் பொரி கொடுத்துக் கொண்டே சொல்கிறார் கிளி ஜோசியர் குமாரசாமி.

சோகமாய் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு டிப்டாப் இளைஞரை நெருங்குகிறார் குறி சொல்லும் பவானியம்மா.

தம்பி மனசுல இப்பவோ அப்பவோன்னு ஒரு ஊசலாட்டம் இருக்கு. கன்னிப் பொண்ணு ஒருத்தி விடாம துரத்திட்டு வர்றா . . . கஷ்டமொண்ணும் இல்லை.

சீர் செனத்தியோடு அந்த மகராசி உன் வீட்டுக்கு வருவா இளைஞனிடம் பல்பு எரிகிறது. நிமிட நேரத்தில் பவானியம்மாவின் கையில் இருபத்தைந்து ரூபாய்.
இங்கிலீசு பேசிக்கிட்டு படிச்ச புள்ளைங்க கூட்டம் நிறைய வரும்.

காதலு, வேலை, வரப்போற பொண்டாட்டினு எதையாச்சும் கேட்பாங்க. வெளிநாட்டு ஆசாமிகளுக்கும் கையைப் பார்த்துச் சொல்லுவோம். ரெண்டு மணி நேரத்துல ஏதோ இருநூறு ரூவா சம்பாதிக்க முடியுது!

இது தவிர பணக்கார வீடுகளில் கல்யாணம் நடந்தா கூப்பிடுவாங்க. கல்யாண வீட்டுக்கு வர்ற பொண்ணுங்களுக் கெல்லாம் கை நிறைய வளையல் மாட்டணும். இதுதான் எங்க வேலை.

இதுக்குக் கூலியா அய்யாயிரம் வரைக்கும் காசு கிட்டும் என்று சொல்லும் பவானியம்மாவுக்கு ரெட்ஹில்ஸில் சொந்தமாக ஒரு மளிகைக்கடை இருக்கிறது. பேரன், பேத்திகளின் படிப்புச் செலவு போக மீதிப் பணத்தை வட்டிக்கு விடுகிறாராம்.

பீச்சின் ஒரு முனையில் கலகலவென சோழி கொட்டும் சப்தம். பேர் ராசியும் சேர்த்துப் பார்த்துரலாமா சார், நூத்தியாரு ரூவாதான் ஆவும் சம்மதமாய் தலையாட்டுகிறார் அந்த வாலிபர். கண் திருஷ்டி இருக்கே, கழிச்சுரலாமா? மெலிதாக ஏதோ ஒரு தகடை மடித்து அந்த வாலிபரிடம் கொடுக்கிறார்.

வடக்குப் பக்கமா போயி இந்த எந்திரத் தகட்டுல எச்சி துப்பி தலையைச் சுத்தி வீசிட்டு திரும்பிப் பாக்காம போயிருங்க சார். ஜோசியரின் கைக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது சில நிமிட வருமானம்.

தாஜ் கோரமண்டல் கன்னிமாரான்னு பிரபல ஓட்டல்களுக்கு வரச் சொல்லி அழைப்பு வரும். பணக்காரங்க யாராச்சும் அங்கே ஃபங்ஷன் நடத்துவாங்க. பத்துப் பதினைஞ்சு நாள் வேலை. மொத்தமா ஆயிரக்கணக்குல சம்பளம் பேசிக்குவோம். விருந்தாளியா வர்ற்றவங்களுக்கு கிளி ஜோசியம் பார்க்கணும். இதுல டிப்ஸ் சமாச்சாரங்கள் தனி என்கிறார் கே.கே.நகரைச் சேர்ந்த ரமணி.

திடீரென அவசரமாய் ஸ்கூல் யூனிஃபார்மில் ஒரு மாணவி வந்தமர்கிறாள். எம்பேரு ஷீலா, வந்து எனக்கு என்று ஆரம்பிக்கும்போதே கலைக்கப்பட்ட சீட்டுகளைக் கூண்டுக் கிளி கொத்த ஆரம்பிக்கிறது.

THANKS TO : “குமுதம்”  5.11.2008

No comments:

Post a Comment