Friday, October 22, 2010

13, 8 எண்களை கண்டால் நடுக்கமா?

இதை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பேயின் மூட நம்பிக்கைபற்றிய செய்தி ஒன்று அவரைப்பற்றிய மதிப்பீட்டை மிகவும் கீழிறங்கச் செய்து விட்டது. முன்னாள் பிரதமரான அவருக்குக் குடியிருப்புக்கு டில்லியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.


அந்த வீட்டின் இலக்கம் எட்டு. எட்டு என்பது ராசியில்லாத எண் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் நம்பிக்கையாம். அதை மாற்றவேண்டும் என்று அவர் விரும்பினாராம். முன்னாள் பிரதமர் அல்லவா - கோப்புகள் மிகவேகமாகப் பறந்து பறந்து சென்றன.எட்டு என்பதற்குப் பதிலாக 6-ஏ என்று அந்த வீட்டின் இலக்கம் மாற்றப்பட்டு விட்டதாம்.

இதை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

மெத்த படித்தவர் - உலகம் சுற்றியவர் - நாள்தோறும் நிகழ்த்தப்படும் அறிவியல் வித்தைகளை நேரில் கண்டும், ஏடுகளில் படித்தும் அறியக்கூடிய நிலையில் இருக்கக் கூடியவர். அவருக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான மூட நம் பிக்கை இருக்கிறது என்றால், நம் நாட்டின் படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று யாராவது நம்ப முடியுமா?

ஒன்று, இரண்டு சொல்லும்போது எட்டு என்று எண்ணும் வருகிறது; அவ்வளவுதானே - அதற்குமேல் என்ன இருக்கிறது?

8 ஆம் எண் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நோய் வருமா? மற்ற வீட்டுக்காரர்களுக்கு நோயே வராதா? இந்த எட்டாம் எண் வீட்டுக்கு வருவதற்கு முன் அவருக்குச் சங்கடங்கள் ஏற்பட்டது இல்லையா? அப்பொழுது ஏன் முழங்கால் வலிக்கு மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்?

எட்டாம் எண் வீட்டில் வசித்தவர்கள் மட்டும்தான் மரணத்தைத் தழுவினார்களா? மற்ற வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு சாவே
நிகழவில்லையா?

இதில் மிகவும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்னவென்றால், வீடு மாறவில்லை. அதே வீடுதான்; அந்த வீட்டின் எண்ணை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். எண்ணை மாற்றினால் அந்த வீடு மாறி விடுமா?

தலைப்பாகையை மாற்றினால் தலைவலி போய்விடுமா?
குடிமக்களின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதே!

அந்த அரசமைப்புச் சட்டத்துக்குச் சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டவர் குடிமகனின் அடிப் படைக் கடமைக்கு மாறாக மூட நம்பிக்கைச் சகதியில் புரளுகிறார்கள் அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரே புரள்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?

எட்டு என்பது போல 13 என்ற எண் ராசியில்லாத எண் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்கூட இருக்கிறார்கள்.

குரோவர் என்ற நீதிபதி டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்தார். அவரைக் குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்திவிட்டான். உடனே, நீதிபதியை டில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிபதி கண்விழித்துப் பார்த்தபோது அந்த அறை எண் 13 என்று இருந்தது. அவ்வளவுதான் பெருங்கூச்சல் போட்டார்.

இந்த 13 என்ற எண் எனக்கு இராசி இல்லாத எண்! நான் கத்தியால் குத்தப்பட்ட தேதி 13, நான் விசாரித்த அந்த வழக்கின் எண் 13 - எனவே, அது எனக்கு இராசியில்லாத எண் - உடனே என்னை இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று குய்யோ முறையோ என்று சத்தம் போட்டார்.

நீதிபதியாயிற்றே - மதிப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்; என்ன செய்தது மருத்துவ மனையின் நிருவாகம்? அந்த அறையில் இருந்த பழைய 13 என்ற எண் பலகையை எடுத்துவிட்டு, 12-ஏ என்று புதிய பலகையை மாட்டிவிட்டனர்; அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.

நீதிபதிகளும், பிரதமர்களும்கூட மூட நம்பிக்கைவாதிகளாக இருந்தால், இந்த நாடு உருப்படுமா? வழிகாட்ட வேண்டியவர்கள் வழிதவறிச் செல்லுகின்றனரே - அதுவும் வாஜ்பேயி போன்ற மூட நம்பிக்கைவாதிகள் ஒரு நாட்டை ஆண்டது எவ்வளவுப் பெரிய கெட்ட வாய்ப்பு!

இந்து மதத்தையும், மூட நம்பிக்கையையும் பிரிக்க முடியாதுதான். அது வாஜ்பேயியாக இருந்தாலும் சரி, அடுத்த பிரதமர் என்று அவர்கள் அறிவிக்கும் அத்வானியும் சரி எல்லாம் ஒரே குட்டையில் (மூட) ஊறிய மட்டைகள்தான். இவர்களை ஒதுக்கி வைப்பதில் மக்கள் கவனம் செலுத்தவேண்டும்; அப்பொழுதுதான் நாடு உருப்படும் - எச்சரிக்கை!

13, 8அய் கண்டால் நடுக்கமா?

மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.
நேரம், காலம், நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், வாஸ்து, எண் ஜோதிடம், இராசிபலன் என்று ஒரு நீண்ட தூரம் மூடத்தனம் பயணித்துக் கொண்டேயிருக்கும்.

எல்லாம் கடவுள் படைப்பு என்றால், இந்த மூடத்தனங்கள் யார் படைப்பு?

அதற்கும் அவன்தான் காரணம் என்றால், அவனைவிட அயோக்கியன், பொறுப்பில்லாதவன் வேறு ஒருவன் இருக்க முடியுமா?

சிலருக்கு 8 இராசி இல்லாத எண்ணாம்; இன்னும் சிலருக்கு 13 பீடை எண்ணாம். எட்டாம் எண்ணைப் பிடிக்காதவர்கள் 13 அய் ஏற்றுக் கொள்கிறார்கள்; 13 அய் பிடிக்காதவர்கள் எட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில், எந்த எண் யாரைப் பாதிக்கும்?

எட்டும், பதிமூன்றும் கெட்ட சகுனங்கள் என்று யாரும் சேர்த்துச் சொல்லுவதில்லையே!

ஏதோ கண்மூடித்தனமாக எதையோ கிறுக்குத்தனமாக கோணங்கித்தனமாக, மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. சரி, இங்கு மட்டும் தான் முட்டாள்கள் இருக்கிறார்களா?

முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தம் என்று கூற முடியாது தான்.

13 அய் கெட்ட நாள் என்று கருதக் கூடிய முட்டாள்கள் உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஞ்ஞான பூர்வமான நிரூபணம் இதற்கு உண்டா என்று கேள்வி கேட்டால், இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற அளவுகோல்கள் எல்லாம் கூடாது - நம்பிக்கை - அய்தீகம் என்று கூறி ஓட்டமாக ஓடிவிடுவார்கள்.

இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார். ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம் பெற நேரிட்டிருக்குமாம்.

அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்களாம்.

1965 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இரயில் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது; டூயிஸ்பெர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.

ராணியார் பயணம் செய்யவேண்டிய அந்த இரயில் 13 ஆவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது! அவ்வளவுதான் பதிமூன்றா? அய்யோ வேண்டாம் என்று அலறினார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியாயிற்றே - என்ன செய்தார்கள்? அந்த இரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்படிச் செய்தனர்.

கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும்.

12 சீடர்களுடன் 13 ஆவது நபராக ஏசு, இரவு உணவைச் சாப்பிட்டார். அப்போதுதான் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் - சிலுவையிலும் அறையப்பட்டார் - எனவே 13 என்பது மரண எண்ணாம்.

அப்படி என்றால், அவர் மீண்டும் எப்படி உயிர்த்தெழுந்தாராம்?
மத விவகாரங்களில் இதுபோன்ற அறிவார்ந்த வினாக்களுக்கு இடம் கிடையாதே!

மாவீரன் நெப்போலியனுக்குக் கூட 13 ஆம் எண் பயம் இருந்ததுண்டாம். குறிப்பிட்ட விஷயத்தில் வீரனாக இருப்பவன். இன்னொரு விஷயத்தில் கோழையாக, மூடனாக இருக்கக் கூடாதா என்ன?

இந்த மூட நம்பிக்கை குளிர் ஜூரத்தை ஓட்டிய பகுத்தறிவுவாதிகளும் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.

1882 சனவரி 13 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 13 துணிவான பகுத்தறிவுவாதிகள் கூடினார்கள். 1882 சனவரி 13 இல் ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13 ஆவது சங்கம் (Thirteenth Club) என்பதாகும்.

ஓர் உணவு விடுதியில் 13 ஆவது அறையில் 8.13 பணிக்குத் தொடக்க விழா நடத்தி 13 மணிக்கு (அதாவது 1 மணிக்கு) விழாவினை முடித்தனர்.சங்கத்தில் சேர நுழைவுக் கட்டம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13 டாலர்.ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி 13 பேரும் கூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. நாளடைவில் கிளைச் சங்கங்களும் உற்பத்தியாகின. இணையும் சங்கத்திடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மூடத்தனத்தை இப்படி சவுக்குக் கொண்டு அடித்தனர்.

சென்னை மாநகராட்சிகூட வீடுகளுக்குக் கதவு இலக்கம் குறிப்பிடும்போது 13 அய் தவிர்ப்பது உண்டு.

அதற்கு விதிவிலக்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தின் பழைய எண் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இல்லத்தின் எண் எட்டாக இருந்தது. அவருக்கு எட்டாம் எண் இராசியில்லாத ஒன்றாம். அந்த எண்ணை மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தாராம். உடனே 6-ஏ என்று மாற்றப்பட்டதாம். வீடு மாற்றப்படவில்லை; எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

மனிதனிடம் இருக்கக் கூடிய விலை மதிக்க முடியாத பகுத்தறிவைப் பயன்படுத்த அஞ்சுவதும், தன்னம்பிக்கையைத் தூக்கி எறிவதும், மரணத்தைக் கண்டு மிரளுவதுமான குணங்கள் ஒருவரிடம் இருக்குமேயானால், அந்த மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும் பயனற்ற பட்டியலிலேயே வைக்கப் படவேண்டியவரே ஆவார்.- கவிஞர் கலி.பூங்குன்றன் SOURCE: unmaionline.com

13 ஆம் தேதி கெட்ட நாளா? மக்களிடையே
நிலவும் மூடநம்பிக்கை

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 13 ஆம் எண்ணை துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் 13 ஆம் தேதியன்று எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் தொடங்குவதில்லை.

ஓட்டல்களில் 13 ஆம் எண் உள்ள அறைகள் இல்லை. விமானங் களில் 13 ஆம் எண் இருக்கை இருப்பதில்லை. மருத்துவ மனைகளில் 13 ஆம் எண் படுக்கை கிடையாது. அதோடு, வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அது தீய செயல்களைச் செய்யும் சாத்தானின் நாளாக கருதப்படுகிறது.

இன்று 13 ஆம் தேதியுடன் வெள்ளிக் கிழமையும் சேர்ந்துள்ளது. எனவே, இன்று துரதிர்ஷ்டமான நாள் என்ற கருத்து நிலவுகிறது.

இது போன்ற மூட நம்பிக்கையும் அச்சமும் தேவையற்றது என்று பகுத்தறிவாளர் அமைப்பு கூறியுள்ளது.

“13 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வந்தால் துரதிர்ஷ்டமான நாள் என்பது அடிப்படையற்ற மூடநம்பிக்கை. நாகரிக வளர்ச் சியின் பல கட்டங்களில் உலக நாள் காட்டியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரத்தில் ஏழு நாள்கள் உள்ளன. எந்த நாளிலும் எதுவும் நடக்கலாம்.

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் தான் கெட்ட காரியங்கள் நடக்கும் என்பதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை” என்று பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவர் சானல் இடமருகு கூறியுள்ளார்.

மிக உயரமான கட்டடங்களைக் கட்டுபவர்கள் 13 ஆம் தளத்திற்கு எண் தருவதில்லை. 12-க்குப் பிறகு 14 என்றே எண் தந்து விடுகிறார்கள். ஏனென்றால், 13 ஆம் எண் மீது பயம்.

டில்லியில் ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி உடல் நிலை சரியில் லாமல் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப் பட்டபோது, அதன் எண் 13 என்பதைப் பார்த்துவிட்டு, தான் வர முடியாது என்று கூறிவிட்டார். வேறு அறையில் தான் அவரைச் சேர்த்தார்கள்.

ஆனால், இங்கிலாந்திலும், ஜப்பானிலும் இது அதிர்ஷ்ட எண் என்கிறார்கள். பிரிட்டனின் அரச குடும்பத்தவரான லார்டு மவுன்ட் பேட்டன் 13 ஆம் எண் அறையில் தான் தங்குவார். நல்ல எண் என்று நம்பியதாலோ?

இந்த இரண்டு நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எப்படிக் கெட்ட நாளாகியது? மூட நம்பிக்கைதான்! ``அஞ்சியஞ்சிச்சாவார்- இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’’ - பாரதி. nandri: viduthalai.com

எங்கே போகிறது சீனா?
கார் பலகையில் 4 ஆம் எண் நீக்கம் அதிர்ஷ்டம் அற்றதாம்!
பெய்ஜிங், அக். 21- செஞ்சீனாவில் கார் எண் பலகைகளில், அதிர்ஷ்டம் இல்லாத 4 ஆம் எண் நீக்கப்படுகிறது. பொது மக்களில் ஒரு பகுதியினர் இதை வரவேற்கிறார்கள், மறு பகுதியினர் கண்டிக்கிறார்கள்.

சீனர்களில் பலர், 4 ஆம் எண் அதிர்ஷ்டம் அற்றது எனக் கருதுவதால், பெய்ஜிங் போக்குவரத்து மேலாண்மைக் கழகம் கார் பலகைகளில் (நம்பர் பிளேட்) அந்த எண்ணைப் பயன்படுத்தி உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டதாம். சீன மொழியில் நாலு என்பது, சாவு என்பதைப் போல் ஒலிப்பதே அதற்குக் காரணம் என அந்நாட்டின் அலுவல் முறையிலான நாளேடு தெரிவிக்கிறது.

சிலர் 7 ஆம் எண் பயன்படுத்துவதையும் விரும்புவதில்லையாம்.
============================

தகவல் உலகம் பதிவுகள் தட்ஸ்தமிழ் THATSTAMILன் தளத்தில் புக்மார்க்ஸ் பகுதியில் இனி வெளிவராது.

தயவு செய்து முதலில் “தகவல் உலகம் “ தொடர்ந்து
படிப்பதற்கு உடனடியாக‌ இந்த சுட்டி http://theriyumaithu.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு சென்று “தகவல் உலகம் “ தொடரை தேடாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து தொடரும் பதிவுகளை படிக்க முடியும்.

தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.

No comments:

Post a Comment